சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு, பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒரு வார காலம் ஒத்தி வைத்துள்ளார்.
பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, டெல்லியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு இன்று அதிகாலை தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனடியாக உயர்வு!
கடந்த 2022 ஆம் ஆண்டு கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது ‘அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே’ என்று பேசியதற்காக இவர் மீது சைபர் கிரைம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








