கொரோனா விதிமுறைகளை மீறிய மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடரின் போது, இலங்கை அணியின் துணை கேப்டன் குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சுற்றினர்.
தங்கியிருந்த ஓட்டலை விட்டு அவர்கள் சென்றது அப்போது சர்ச்சையானது. சமூக வலை தளங்களில் இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பானது. இதுகுறித்து 5 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டதில், விதிமுறைகளை அந்த வீரர்கள் மீறியது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 வீரர்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இப்போது ஒரு வருடம் தடை விதித்துள்ளது. அவர்களுக்கு 50 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.







