சித்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய கார், தீப்பிடித்து எரிந்ததில், 6 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 11 கி. மீ தூரத்தில் இருக்கிறது காணிப்பாக்கம். இங்குள்ள புகழ்பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலுக்கு, சித்தூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர். அதில் 8 பேர் இருந்தனர். சாமி கும்பிட்டுவிட்டு மாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சந்திரகிரி பகுதியில் உள்ள புத்தளப்பட்டு-நாயுடுபேட்டை சாலையில் கார் வந்துகொண் டிருந்த போது, வளைவில் திரும்ப முற்பட்டது. வேகமாக வந்ததால் சாலை நடுவில் இருந்த தடுப்பில் திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறி கார் கவிழ்ந்தது. அடுத்த நொடியே எரிபொருள் கசிந்ததில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த போலீசார், தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில், குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர், திருப்பதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.








