பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகளை பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். 10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள தன்மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவின் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சிவசங்கர் பாபுவுக்கு ஜாமீன் வழங்கினால் புகார்தாரர்களுக்கும், விசாரணைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடம் இருந்து மக்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மக்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக கூறும் போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தார்.