#Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!

சிவகாசியில் மது போதைக்கு அடிமையாகி தகராறில் ஈடுபட்டு வந்த மகனை ஆத்திரம் தாங்காமல் தந்தையே அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. தென்காசி எல்.ஆர்.எஸ் பாளையம் புங்கடி கோவில் தெருவை சேர்ந்த வயோதிக…

#Sivakasi | The son who was addicted to drugs and blackmailed his parents - the father who killed his wife with a sickle!

சிவகாசியில் மது போதைக்கு அடிமையாகி தகராறில் ஈடுபட்டு வந்த மகனை ஆத்திரம் தாங்காமல் தந்தையே அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த நிகழ்வு நடந்தேரியுள்ளது.

தென்காசி எல்.ஆர்.எஸ் பாளையம் புங்கடி கோவில் தெருவை சேர்ந்த வயோதிக தம்பதியினர் ராமசாமி (74) – கிருஷ்ணம்மாள் (70). இவர்களுக்கு வெங்கட்ராமன் (47), சுப்பிரமணியன்(34) ஆகிய இரு மகன்களும், சுப்புலட்சுமி (40) என்ற மகளும் உள்ளனர். வெங்கட்ராமனுக்கும், சுப்புலட்சுமிக்கும் திருமணமாகி, வெங்கட்ராமன் தென்காசியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மகள் சுப்புலட்சுமி ரயில்வே போலீசாக பணிபுரியும் பாபுவுடன் திருமணமாகி சிவகாசியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

2வது மகன் சுப்பிரமணியனுக்கு திருமணமாகாத நிலையில், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்தில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். விவசாயத் துறையில் உயரதிகாரியாக பணிபுரிந்த தந்தை ராமசாமி, கடந்த 2002-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு மாதந்தோறும் ஓய்வூதிய பென்ஷன் தொகை ரூபாய் ரூ.28000 வரை கிடைக்குமென்று கூறப்படுகிறது. இதற்கிடையே ராமசாமி இதய நோயால் பாதிக்கப்பட்டு, அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டுள்ளது. எனவே சிகிச்சைக்காக சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், சாத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசியிலிருந்து சாத்தூருக்கும், சிவகாசிக்கும் அடிக்கடி வந்து செல்ல முடியாத அவர், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவில் வாடகை வீடு பிடித்து குடியிருந்து வருகின்றனர். தாய் – தந்தையுடன் வசித்து வந்த மகன் சுப்பிரமணியன், அன்றாடம் தனது தந்தை ராமசாமியிடம் குடிப்பதற்கு ரூ.600 வரை கொடுக்க வேண்டுமென்று பெற்றோரை மிரட்டி, துன்புறுத்தி வாங்குவதாக கூறப்படுகிறது. மகனின் அன்றாட செயல்பாட்டால் வயதான தம்பதியினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இதற்கொரு முடிவு கட்டி தீர்வு காண வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த ராமசாமி, தனது மனைவி கிருஷ்ணம்மாள் திருத்தங்கலிலுள்ள கோயிலுக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டினுள் போதையில் உறங்கிக் கொண்டிருந்த மகன் சுப்பிரமணியனை சவுக்கு கட்டையால் மண்டையில் தாக்கி, அரிவாள்மனையால் தலையில் வெட்டி காயப்படுத்தியதோடு, தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு போக செய்து கொலை செய்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த ராமசாமி தனது மகன் கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

ராமசாமி முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதை கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுப்பிரமணியன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடிக்க பணம் கேட்டு தாய்- தந்தையை கொடுமைப்படுத்திய மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.