சோபா அரசியல்: உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி…!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சன்-ஆதன சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசு தலைவர் என்று அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது கடுமையான விமர்சங்களை முன் வைத்து வருகிறார். தவெக அரசு சோபாமாடல் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் கூறி வருகிறார். நேற்று உதயநிதி வெளியிட்ட பதிவில் ஐந்து இருக்கைகள் கொண்ட சோபாவின் புகைப்படம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ வாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை விமர்சிக்கும் விதமாக உதயநிதியின் எக்ஸ் பதிவு அமைந்திருந்தது.

இந்த நிலையில் உதயநிதியின் கருத்திற்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே…

அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?

நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல… மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.

சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!

தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.