முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

’கல்வியில் இந்துத்துவாவை புகுத்த ஆளுநர்கள் மூலம் பாஜக முயற்சி’ – சீத்தாராம் யெச்சூரி

கல்வியில் இந்துத்துவாவை கொண்டு வர ஆளுநர்கள் மூலம் பாஜக முயற்சி செய்து வருகின்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாள சமாஜத்தில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய அவர், “இமாச்சலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிஜேபிக்கு சரியான பதிலடி அம்மாநிலங்களின் மக்கள் அளிப்பார்கள். பாண்டிச்சேரியில் இரட்டை இன்ஜின் பிரச்னை உள்ளது. அங்கு இரண்டு அரசு நிர்வாகமும் இரட்டை இன்ஜின்களாக வேறு வேறு செயல்பாட்டில் உள்ளனர். மொழி பிரச்னையில் இந்த இரண்டு இன்ஜின்களும் மோதிக் கொண்டுள்ளது. இந்தி என்ற ஒற்றை மொழியை பாஜக திணிக்க நினைக்கிறது. இந்தி, இந்துஸ்தான் என்று முயற்சி செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.


நான் ஒரு இந்தியன். அனைத்து இந்தியர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க
வேண்டும். கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் வேந்தர்களாக கவர்னர்கள் செயல்பட்டு
பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த பார்க்கின்றனர். பாண்டிச்சேரி கவர்னர் மாநில அரசின் திட்டங்கள் சட்டங்களுக்கு கையெழுத்து போடுவதில்லை. இவர்கள் கல்வி துறையை குறி வைத்துள்ளனர். கல்வியில் இந்துத்துவாவை கொண்டு வர ஆளுநர்கள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர். ஒற்றைக் கலாச்சாரத்தை கொண்டு வந்து இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

பாசிச ராஜ்யத்தை நடத்த பாஜக செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க பணி செய்து வருகின்றனர். கார்ப்பரேட், மதவெறி கூட்டணியுடன் பாஜக செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்படுகிறது. இதற்கு பாஜக ஆதரவாக உள்ளது. ஒட்டுமொத்த பொருளாதார இறையான்மையை சூறையாடி வருகின்றனர். அதற்கு பாஜக ஆட்சியாளர்கள் உடன் இருந்து வருகின்றனர்.


இன்று காலை, கோவை வர்த்தக சங்கங்கள் என்னிடம் ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கமாக கம்யூனிஸ்டுகளை இவர்கள் அழைப்பதில்லை. ஆனால் இந்த முறை அழைத்து, மத்திய அரசினால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்தனர். அதில் ஒன்றிய அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பம்ப் உற்பத்தியில் ஈடுபடுமோ என்ற
அச்சத்தை தெரிவித்தனர்.

கோவையில் டெக்ஸ்டைல் துறை ஜிஎஸ்டியால் ஏற்பட்ட பாதிப்பை தெரிவித்தனர். சிறு குறு நடுத்தர தொழில் முனைவோரை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர யாரும் இல்லை. ஈவு இரக்கமில்லாத கொள்கையாக பாஜக கொள்கை உள்ளது. இது நமக்கு உற்பத்தியாளர்களை அணி திரட்டுவதற்கான வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பம்ப் செட்டின் மிகப்பெரிய நுகர்வோர், விவசாயிகள். ஆனால் பாஜக அரசு விவசாயிகளிடம் தெரிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 2023 டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றிணைவோம். விவசாயிகளின் போராட்டத்தோடு அனைவரும் ஒன்றினைய வேண்டும். போராட்டங்களின் உச்சகட்டமாக மோடி அரசை வீழ்த்த வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி தான் காரணம். இந்தியாவில் உணவுப் பொருட்கள் மீது வரி விதிப்பு இதுவரை இருந்ததில்லை. காந்தி உப்பு மீது வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார். ஆனால் இந்தியாவில், எல்லா உணவு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி. நான் இன்று கோவையில் சாப்பிட்ட அப்பளத்தின் மீது ஜிஎஸ்டி விதித்துள்ளார்கள். அனைத்து உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல் மீதான வரியும் திரும்ப பெற வேண்டும்.

பாஜகவை டெல்லியில் இருந்து துரத்த வேண்டும். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மதச்சார்பற்றவர்களும் ஒற்றுமையாக இணைய வேண்டும். அப்படி ஒன்றிணைவதற்கான பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். பரந்து விரிந்த அணியை சேர்க்க
ஏற்பாடு செய்து வருகிறோம். பாஜகவை 2024ல் வரவிடாமல் தடுப்பது நம் கடமை. தமிழகத்தில் ஏற்கனவே இரட்டை இன்ஜின் ஆட்சி தான் நடந்தது. அதிமுக-பாஜக கூட்டணி அது. அவர்களை வெளியேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம். அந்த சாதனை மீண்டும் தேசிய அளவில் நிகழ்த்த வேண்டி உள்ளது. கோவை மக்கள் பல சாதனை படைத்தவர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட்டை ஜெயிக்க வைத்தீர்கள். அதேபோல் மீண்டும் பாஜகவை எதிர்க்க வேண்டும்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைது

EZHILARASAN D

தோல்வியும் ஒரு கற்றல் அனுபவமே-ஷிகர் தவன்

G SaravanaKumar

குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு

EZHILARASAN D