இந்தோனேசியாவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், உள்ளிட்டோர் இந்தோனேஷியா சென்றடைந்த நிலையில், பிரதமர் மோடியும் இந்தோனேஷியா சென்றடைந்தார். பாலி விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று நடைபெறும் மாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்தும், சர்வதேச பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. சர்வதேச அளவில் உணவுப்பாதுகாப்பையும் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டுக்கு இடையே உலகத்தலைவர்களின் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளன. இதனிடையே, சர்வதேச சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்தும், இந்தியாவின் உறுதிப்பாடு குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்க உள்ளதாகவும், மாநாட்டின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப்பேசவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.