தமிழ்நாட்டில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் கடந்த மாதம் 10ஆம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டம் முதலில் கடந்த 29ஆம் தேதி தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் அந்த தொடக்க விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை மீண்டும் தொடங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்த படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட உள்ளது.இதன் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்பு குழுவில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பிற பதவிகளில் இருந்து 20 காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்களுக்கு புதிய சீருடையை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அடர் நீல நிற சட்டை, காக்கி பேன்ட், கருப்பு நிற தொப்பி, பேட்ஜ் ஆகியவை அடங்கிய சிறப்பு சீருடை அறிமுகம்.சட்டையில் சிங்கப்பெண் லோகோ பேட்ஜ், கருப்பு நிற பெல்ட், எடை குறைவான கருப்பு ஷூ ஆகியவை வழங்கப்படும்.

இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.