என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி, ஒரு வசந்த கீதம் உள்பட பல படங்களை இயக்கியவரும், நடிகருமான டி.ராஜேந்தர், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ, குடும்பத்தினரோ முழுமையான தகவலை அளிக்காத நிலையில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.







