ஜாதி மறுப்பு இளைஞர் மீது தாக்குதல் – பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை மகள் காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் இளைஞரின் வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் மற்றொரு…

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை மகள் காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் இளைஞரின் வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.

கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின்
குடும்பத்தினர் கார்த்திக்கின் வீட்டில் புகுந்து அவர்களை தாக்கினர். மேலும் தகாத
வார்த்தையில் பேசி  அவர்களை காரில் கடத்திச் சென்றனர்.

இதனை அடுத்து இளைஞரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரூர்
காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் பெண்ணின் பெற்றோர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்ணின் பெற்றோர்களால் திருமணமான தம்பதியினருக்கு மிரட்டல்
இருப்பதாகவும் எனவே பெண்ணின் குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்ட இளைஞரின் தரப்பில்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண்ணின் பெற்றோர்கள்
தங்களால் அந்த இளைஞருக்கும் தங்கள் மகளுக்கும் எந்த விதமான இடையூறும் ஏற்படாது என உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கில்
பெண்ணின் பெற்றோருக்கு திங்கள் மற்றும் சனிக்கிழமையில் சம்பந்தப்பட்ட காவல்
நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் சாட்சியங்கள் கலைக்க கூடாது எனக்கூறி, நிபந்தனையுடன் ஜாமீன்  வழங்கி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.