லாக்கப் மரணங்கள் நடக்க காரணம் இதுதான்- டிஜிபி

குடிபோதையில் காவலர்களை தாக்குபவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவதன் காரணமாக தான் லாக்கப் மரணங்கள் நிகழ்வதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையகரத்திற்க்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் சிறப்பாக…

குடிபோதையில் காவலர்களை தாக்குபவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவதன் காரணமாக தான் லாக்கப் மரணங்கள் நிகழ்வதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையகரத்திற்க்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் சிறப்பாக பணி புரிந்த உதவி ஆணையர்கள், சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை தனிப்படை போலீசார் உள்ளிட்டோருக்கு வெகுமதி, நற்சான்று வழங்கி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு டிஜிபி, ஆவடி காவல் ஆணையரகத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் கலவரத்தை எளிதாக கட்டுப்படுத்த கையாளும் தற்காப்பு ஆயுதங்கள் ரப்பர் குண்டு துப்பாக்கி, எலக்ட்ரிக் ஷாக் லத்தி, பிரத்யேக எலக்ட்ரிக் ஷாக் தடுப்பான் போன்றவை அறிமுகம் செய்து, காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.

மேலும் குடிபோதையில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும், தகராறில் ஈடுபடுவதாலும் திரும்ப லத்தியால் தாக்குவதால் தான் லாக்கப் மரணங்கள் ஏற்படுகிறது. காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அவர்களை லத்தியால் தாக்காமல் எப்படி விலங்கு போடுவது என்பது குறித்த பயிற்சி தர உள்ளோம். இதன்மூலம் லாக்கப் மரணங்களை தவிர்க்க முடியும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கஞ்சா தடுப்பு வேட்டை 1.0 மற்றும் 2.0 வில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் கஞ்சா தொழிலில் ஈடுபட்டால் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபடுவார்கள் என எச்சரிக்கைவிடுத்தார்.

மேலும் பெரியளவில் கஞ்சா தொழில் செய்பவர்களில் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் , கள்ள சாராயம் விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மலை கிராமங்கள் போன்ற ஒருசில இடங்கள் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் கள்ளசாராயம் விற்பனை இல்லை, அதற்கும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார் .

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.