“சைன் ஆப்காட்” குறும்படத்தை தடை செய்க; ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

முல்லைப் பெரியார் அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வெளியான சைன் ஆப் காட் குறும்படத்தை தடை செய்ய தமிழக-கேரள முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்…

முல்லைப் பெரியார் அணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வெளியான சைன் ஆப் காட் குறும்படத்தை தடை செய்ய தமிழக-கேரள முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில்
“கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் என்ற அபத்தமான குறும்படம், இரு மாநில உறவுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது. முல்லை பெரியார் குறித்து கற்பனைக் கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக உள்ளது. குறிப்பாக குளோபல் டிசாஸ்டர், சேவ் கேரளா என்று வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக முல்லை பெரியார் இருந்து வருகிறது. முல்லை பெரியார் பிரச்சனையில் பல கட்ட போராட்டங்களை கடந்து தான் ஜெயலலிதா 2014ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியார் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்று தந்தார்.

பல கட்ட ஆய்வில் பல வல்லுனர்கள் ஆய்வு செய்ததில், அணை உறுதி தன்மையாக உள்ளது என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மூன்று முறை முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார்கள். முல்லை பெரியார் அணை பல கட்ட ஆய்வுக்குப் பிறகு உறுதித் தன்மை உள்ளது என்று விஞ்ஞான சான்றுள்ளது.

ஆனால் கேரள அரசு புதிய அணைக்கட்ட பல்வேறு கற்பனை கலந்த வதந்தியை பரப்பு வருக்கிறது. குறிப்பாக பிஞ்சு குழந்தைகள் இதயங்களில் நஞ்சை விதைக்கும் வண்ணம் கேரளாவைச் சேர்ந்த ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் குறும்படம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த குறும்படத்தை கேரளா அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும். இந்த குறும்படம் வன்மத்தோடு எடுக்கப்பட்டது.

இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வன்மத்தோடு உள்ள வெளியிட்டுள்ள நபர்களை சட்டப்படி கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான கருத்துக்களை பரப்புவது தேசத்திற்கு விரோதமான செயலாகும். கற்பனை கலந்த இந்த குறும்படத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும். இந்த குறும்படம் மூலம் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும். முதலமைச்சர் விழித்துக் கொண்டு தமிழகத்தின் ஜீவதார உரிமையை காக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.