WTC இறுதிப் போட்டியில் 13 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்த சுப்மன் கில் ! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ?

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் போலாந்த் வீசிய பந்தில் போல்ட் ஆகி…

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் போலாந்த் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறிய சம்பவம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 327 ரன்கள்
குவித்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது, முதல் இன்னிங்ஸின் முடிவில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 4 முக்கிய விக்கெட்டுகளை
வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 14 ரன்களும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். இதன்படி நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் குறிப்பாக, இந்திய அணியின் அடுத்த விராட் கோலி என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் வெறும் 13 ரன்களில், ஆஸ்திரேலிய வீரர் போலாந்த் வீசிய பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்த சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து 3 சதம் என சுப்மன் கில் பட்டையை கிளப்பி பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி இருந்தால், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து கலக்குவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்நிகழ்வு அவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொருத்தே, அவருடைய உண்மையான திறமை தெரியும்
என பல கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்திருந்ததோடு, டெஸ்ட் கிரிக்கெட், டி20 யை விட முற்றிலும் வித்தியாசமான போட்டி என்பதால், கில்லை அதற்குள்ளும் பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் கூறியிருந்தனர். அதன்படி, சுப்மன் கில் துவக்கத்திலேயே சரிவை சந்தித்துள்ள போதிலும் , இதிலிருந்து பாடம் கற்று மீண்டும் தன்னுடைய திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் காட்டி, இங்கிலாந்தில் வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.