சுருக்குமடி வலை ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை மற்றும் போலீசார் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்களால் நடுக்கடலில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை அதிகாரிகளும் பல கட்ட முயற்சிகளை எடுத்து வருவதுடன் சுருக்குமடி வலைகள் பயன்படுத்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டும், படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் 6 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் சுருக்குமடி வலையினை பயன்படுத்துகிறார்கள் என தகவல் கிடைக்கப்பட்டதையடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 5-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மீன்பிடித்த பைபர் படகை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது 10க்கும் மேற்பபட்ட படகுகளில் மீனவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகள் சென்ற படகை சுற்றி ராட்சத அலைகளை கடலில் உருவாக்கி கடலில் கவிழ்க்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உருவான அலையில் சிக்கிய அதிகாரிகள் ஒரு கட்டத்தில் பின்வாங்கி கரை திரும்பினர்.
இதுகுறித்து தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். நடுக்கடலில் அதிகாரிகளின் படகை கவிழ்க்க முயற்சி செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.







