மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை: தமிழ் நாடு அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்…!

அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அடிப்படை பணியாளர்கள் கூட இல்லாமல் இருப்பதும், தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதும் அங்குவரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொண்டு, அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.