ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணிகளில் ஒன்று பெங்களூரு. அறிமுக தொடரில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ராகுல் டிராவிட், ஜாக் காலீஸ், அனில் கும்ளே, ஏ.பி. டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட பல புகழ் பெற்ற வீரர்கள் விளையாடியுள்ளனர். இவ்வளவு இருந்தும் ஒரே ஒரு குறை மட்டும் பெங்களூரு அணியை வாட்டி வந்தது. அது ஐபிஎல் கோப்பை.
விராட் கோலி என்னும் தலைசிறந்த டி20 வீரரை கொண்டுள்ள பெங்களூரு அணியால் சுமார் 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை என்னும் கனவை நினைவாக்க முடியவில்லை.
இந்த சூழலில் கடந்த 2025 ஆம் சீசனில் பெங்களூர் அணி ரஜட் படிதார் என்னும் புதிய கேப்டனின் தலைமையில் களமிறங்கியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 14 போட்டிகளில் 9 வெற்றி 4 தோல்விகள் பெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ப்ளேஆஃப் சுற்றில் பஞ்சாப் அணியை வென்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் மீண்டும் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் ஐபிஎல் கோப்பையை தன் வசப்படுத்தியது.
நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 14 போட்டிகளில் 9 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று ப்ளே ஆஃப்க் சுற்றிற்கு முன்னேறியது. ப்ளே ஆஃபின் குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜாராத் அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் இருவர் ஆவர். முதலாமவர் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை வென்றது. அதே போல் ரோகித் சர்மாவின் தலைமையிலான மும்பை அணி 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.
2025 ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்று மீண்டும் கோப்பையை வென்றால் தோனி, ரோகித் சர்மாவின் சாதனை பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது.







