திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இன்று நடைபெற்ற வைகாசி விசாக தேரோட்டத்தின் போது விபத்து ஏற்பட்டது. தேரோட்டத்தின்போது சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய ஹர்ஷவர்தன் (19) என்கிற இளைஞர் பலத்த காயமடைந்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19), தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் திருங்கோடு தேர் விபத்தில் உயிரிழந்த இளைஞருக்கு இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட திரு.ஹர்ஷவர்தன் (வயது 18), த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.சஷ்டிகன் (வயது 19). த/பெ.கௌரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







