கோலிவுட்டில் இந்த வாரம் அர்ஜுன் நடித்த “பிளாஸ்ட்” மற்றும் ரோபோ சங்கர் நடித்த “ஈகோ ராமன்” ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன் நடித்த “காட்டாளன்” ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களில் மினி ரீவியூ இதோ…!
பிளாஸ்ட்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரித்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகி வந்துள்ள ஆக்சன் படம் ‘பிளாஸ்ட்’. வில்லன் ஜான் கொக்கைன் மற்றும் பவன், அருண் சிதம்பரம் டீம் சாதாரண ஹெட் மாஸ்டர் குடும்பம் என்று நினைத்து அர்ஜுன் குடும்பத்துடன் மோதுகிறார்கள். அதற்கு பின்னால் ஒரு அரசியல்வாதியின் ஆயிரம் கோடி பணம் இருக்கிறது. ஆனால் அர்ஜுன் குடும்பமோ ஹெட் மாஸ்டர் குடும்பம் அல்ல, பக்கா கராத்தே மாஸ்டர் குடும்பம். அனைவருக்கும் கராத்தே தெரியும் என்பது தெரிய வர என்ன நடக்கிறது என்பது பிளாஸ்ட் பட கதை.

சண்டைக் காட்சிகளில் அமர்க்களம் பண்ணி, தெறிக்க விட்டிருக்கிறார் அர்ஜுன். ஆரம்பத்தில் அமைதியாக இருப்பவர் இடைவேளை காட்சி மற்றும் இடைவேளைக்கு பின் அனல் பறக்க விடுகிறார். அவரின் சண்டை காட்சிகள் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு பிளஸ். அதேபோல் வீட்டில் பெண்களை வீரத்தோடு விளக்க வேண்டும் தற்காப்பு கலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவருடைய கொள்கை நமக்கு படிப்பினை.
பல படங்களில் ஹோமிலியாக நடித்த அபிராமி இதில் தொடக்கத்தில் ஹோம்லியாக வந்தாலும் இடைவேளையில் வில்லன்களை அடித்து, உதைத்து வேறு ஜானருக்கு மாறுகிறார். சேலையில் அவர் போடும் சண்டை காட்சிகள் தியேட்டரில் கைதட்டலை வரவழைக்கிறது. அபிராமிக்கு இது முக்கியமான படம். அதேபோல் கவர்ச்சியாக இளமையாக நடித்து வந்த ப்ரீத்தி முகுந்தன் இதில் ஆக்சனுக்கு மாறி இருக்கிறார். காரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரியை அடித்து துவைப்பதில் தொடங்கி, மெடிக்கல் சண்டை காட்சி, இடைவேளை சண்டைக்காட்சி அனைத்து சண்டை காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். சமீப காலத்தில் எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு இது. அவருக்கு காதல், பாடல் காட்சிகள் இல்லை.
வில்லனாக நடித்தவர்களில் அருண் சிதம்பரம் நடிப்பு ஓகே. ஜான் கொக்கன், பவன் ஆகியோர் வழக்கமான வில்லன் நடிப்பை தந்திருக்கிறார்கள். படத்தில் இன்னொரு ஹீரோ பைட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு தான், அர்ஜுன் அபிராமி , ப்ரீத்தி மூன்று பேருக்கும் பக்கா சண்டை காட்சிகளை வடிவமைத்து, அதை கமர்சியலாக்கியும் கலக்கி இருக்கிறார்.
அதேபோல் ரவி பஸ்ரூர் இசையும் படத்தை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஆடல், பாடல், காமெடி, ரொமான்ஸ் ஆகியவற்றை மறந்து முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் ஃபேமிலி சென்டிமென்ட் வைத்து பிளாஸ்ட் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சுபாஷ் கே. ராஜ்.
அரசியல்வாதி, வில்லன் சம்மந்தப்பட்ட சீன்கள் கொஞ்சம் போர் அடித்தாலும் கிளைமாக்ஸ் டக்கென்று முடிந்தாலும் ஹோம்லி படத்தில் ஆக்சன் என்ற புதுமையான விஷயம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக வீட்டில் உள்ள பெண்களும் வீரமாக இருக்க வேண்டும் தற்காப்புகலை பயில வேண்டும். யாருக்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்ற கருவும் ரசிக்க வைக்கிறது. இந்த வார படங்களில் பிளாஸ்ட் உண்மையிலே பிளாஸ்ட்தான்.
ஈகோ ராமன்
கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் ரோபோ சங்கர், சிபி புவன சந்திரன், கீர்த்தனா உட்பட பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் ‘ஈகோ ராமன்’. தலைப்பிற்கு ஏற்ப ஈகோ பிடித்துவராக ஜாதி வன்மம் மிக்கவராக தானே அனைத்திலும் முதலாவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக, அரசு பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருக்கிறார் மறைந்த ரோபோ சங்கர். காமெடியனாக அப்பாவியாக பார்த்த ரோபோ இதில் வில்லத்தனம் மிக்கவராக, பழி வாங்கும் தன்மை கொண்டவராக சிறப்பாக நடித்து இருக்கிறார். அப்படி மாறி நடித்து இருப்பதும் ரசிகர்களை ஈர்க்கிறது. குறிப்பாக, ஈகோவால் அவர் கொதிக்கிற இடங்கள், முகம் மாறி சில சம்பவங்கள் செய்கிற இடங்கள் அப்ளாஸ். கிளைமாக்சில் அவர் தவிக்கிற இடமும் பிரமாதம்.

முன்னாள் மாணவராக , அரசு வேலைக்கு தயாராகிறவராகும் கேரக்டரில் சிபி புவன சந்திரனும் தனது கேரக்டர் உணர்ந்து கலக்கி இருக்கிறார். ஆசிரியர் பாசத்தால் அவர் உருகுகிற இடங்களும், காதலை ரோபோ சங்கர் மறுக்கும் போது மனம் கலங்கிற இடங்களிலும், கடன் பிரச்னையால் கலங்குற இடங்களிலும் ரசிக்க வைக்கிறார். அவர் காதலியாக வருகிற கீர்த்தனா ஹோம்லியாக சிம்பிளாக நடித்துள்ளார். எப்போதும் சோகமாக இருக்கும் ஹீரோ அம்மாவாக வரும் கவிதா ரமேஷ் நடிப்பில் செயற்கை தனம்.
ஆசிரியர், மாணவர் பின்னணியில் பல படங்கள் வந்திருந்தாலும் இதில் சொல்லப்படும் விஷயம் பிரஷ் ஆக இருக்கிறது. கிளைமாக்சில் தன்னை புறக்கணித்த ரோபோ சங்கர் தலைமை ஆசிரியர் ஆக இருக்கும் ரோபோ சங்கர் பள்ளிக்கே சிபி கல்வி அதிகாரியாக வருவதும் அப்போது நடக்கும் சம்பவங்களும், அவர் பேசும் விஷயங்களுக்கும் டச்சிங். ஆசிரியர் எப்படி இருந்தாலும் மாணவர் எப்படி இருக்க வேண்டும். ஆசிரியரை மதிக்க வேண்டும் என்ற கிளைமாக்ஸ் பலருக்கு பாடம். ஈகோவும், வன்மமும் வாழ்க்கையில் நிம்மதியை கெடுக்கும் என்ற கருத்தும் நச்.
பல இடங்கள் மெதுவாக நகர்வதும் பல இடங்கள், சிலர் நடிப்பு செயற்கைதனமாக இருப்பதும் மைனஸ். ஆனாலும் , மறைந்த ரோபோ சங்கர் நடிப்பு மற்றும் படத்தில் சொல்லப்படும் கருத்துக்காக ஈகோ ராமனை ரசிக்கலாம்
காட்டாளன்
கேரள காட்டில் யானைகளை கொன்று தந்தங்களை இலங்கைக்கு கடத்துகிறார் தாதா புஷ்பா சுனில். அவருக்கும் கபீருக்கும் தொழில் போட்டி. இந்த சண்டையில் பலர் கொல்லப்படுகிறார்கள். இந்த சமயத்தில் ஹீரோ ஆண்டனி வர்க்கீஸ் என்ட்ரி ஆகி, சுனில் டீமில் சேருகிறார். எதிரணி, போலீஸ், ரவுடிகளை சமாளித்து தந்தங்களை கடத்துகிறார். ஒரு கட்டத்தில் சுனிலுக்கும் அவருக்கும் பிரச்னை வர, அவர் தனியாக தொழில் செய்ய நினைக்கிறார். ஒரு டீம் உதவியுடன் தந்தம் கடத்த ஆரம்பிக்க, என்ன நடக்கிறது. ஹீரோ, வில்லன் மோதலில் என்ன முடிவு ஏற்படுகிறது என்பதே ‘காட்டாளன்’ படத்தின் கதை.

இப்படத்தை பால்வர்கீஸ் இயக்கியிருக்கிறார். முழுக்க, முழுக்க ராவான ஆக் ஷன் கதை என்பதால், அதற்கான டோனில் படம் நகர்கிறது. வில்லனாக வரும் சுனில் கேரக்டர், அவர் நடிப்பு, எப்படி அவர் அந்த இடத்துக்கு வந்தார் என்ற விஷயங்கள் ஓகே. அதேபோல், தந்தங்களை கடத்துகிற காட்சியில் புத்திசாலிதனமாக செயல்படும் ஹீரோ பாணி, வில்லனை எதிர்க்க போடும் ஸ்கெட்ச், கடைசியில் அப்பாவிகள், உழைப்பாளிகளுக்காக அவர் எடுக்கும் ரிஸ்க், சண்டை ரசிக்க வைக்கிறது.
படத்தில் ரெனடைவ் ஒளிப்பதிவு, ரவிபஸ்ரூர் இசை, கெச்சா மாஸ்டரின் சண்டைக்காட்சிகள் மூன்றும் செம. மலையாள டப்பிங் என்பதால் தமிழ் டச் இல்லை. ஆரம்பம் முதல் கடைசிவரை சண்டை, ரத்தம், கொலை, வன்முறை இருப்பது சில சமயம் போரடிக்கிறது. ஆக்சன், சென்டிமென்ட் தவிர கதையில் வேறு எதுவும் இல்லை. ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கு உதவும் பெண்ணாக துஷாரா விஜயன் வருகிறார். அவரின் கெட்அப், அவரின் வசனம், அவர் ரிஸ்க் எடுத்துபோடும் சண்டை கண்களுக்கு விருந்து.

கிளைமாக்ஸ் பைட் செம ஸ்பீடு. ஆனாலும், பல இடங்களில் புஷ்பா, கேஜிஎப் போன்ற படங்களின் சாயல் வருவதை தடுக்க முடியவில்லை. யானைகளை கொல்லும்காட்சிகள், அப்பாவிகளை கொல்லும் இடங்கள் கண்களை மூட வைக்கிறது.
வில்லன் vs ஹீரோ என மோதிக்கொண்டே இருப்பது ஆக்சன் பிரியர்களுக்கு பிடிக்கலாம். மற்றவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். பல அதிரடி சீன்கள், பிரமாண்ட சண்டைக்காட்சிகள், நடிகர்கள், நிறைய உழைப்பு இருந்தும் சரியான கதை, திரைக்கதை இல்லாததால் காட்டாளனை ரசிக்க முடியவில்லை. கிளைமாக்சில் ஒரு முக்கியமா இடத்தில், ஒரு முக்கியமான நபராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருகிறார். அவர் வரும் இடங்கள் பில்டப். அது, அடுத்த பாகத்துக்கான தொடக்கமாகவும் இருக்கிறது.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்







