புதுச்சேரி கடற்பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கடலோர காவல்படை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கடலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றம், சுருக்குமடி வலை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒருவாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 தினங்களில் மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருந்தபோதிலும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி பிற நாட்களிலும் புதுச்சேரியில் உள்ள சில மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக கடலோர காவல்படைக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து புதுச்சேரி கடலோர காவல்படை கண்காணிப்பாளர் பழனிவேல் தலைமையில் போலீசார் இன்று வீரம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு, மூர்த்திகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடலில் படகில் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தடையை மீறி சுருக்குமடிவலையை பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்த போலீசார் கடலில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கடத்தல் நடைபெறுகிறதா என்றும் படகுகளில் சோதனை செய்தனர். மேலும் இந்த சோதனை தொடரும் என்றும் கடலோர காவல் கண்காணிப்பாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.







