ஜெய்பீம் படத்தை மிஞ்சிய சம்பவம்- விசாரணை கைதி மரணத்தில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் பலத்த காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல்…

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் பலத்த காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் கத்தி, கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது. இதையடுத்து , திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்ற 28 வயது இளைஞரும், பட்டினபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 28 வயது இளைஞரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

அவர்களிடம் இரவில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விக்னேசுக்கு காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டது.

 

இதனிடையே, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண்ஹெல்டர், விக்னேசின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விக்னேசின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்களை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விக்னேஷ் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் உள்ளது. மேலும் அவரது தலையில் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு துளை உள்ளதாகவும், உடலில் 13 இடங்களில் பலத்த காயங்கள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து காயங்களும் லத்தி அல்லது கம்பால் கொண்டு தாக்கப்பட்டதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விக்னேசின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேசும்போது விக்னேசின் உடற்கூறாய்வு அறிக்கைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று உடற்கூறாய்வு அறிக்கையில் காவல் நிலையத்தில் விக்னேஷ் உயிரிழந்திருக்கலாம் என்ற அறிகுறிகள் தென்படுவதால் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜெய்பீம் திரைப்படம் போன்று இந்த உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்துள்ளது, ஜெய்பீம் படத்தை மிஞ்சிய சம்பவமாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.