தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மதுரை ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பட்டிண பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும், இந்து மதத்த்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்றும் மன்னார்குடி ஜீயர் சென்னடலங்கார செண்பக மன்னார் இராமனுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
பட்டினப் பிரவேசம் என்று அழைக்கப்படும் இந்த சடங்கில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்துகொண்டு நகர்வலம் வருவார்கள். மனிதனை மனிதன் சுமப்பது மனித மாண்புக்கு எதிரானது என்று கூறி திராவிடர் கழகத்தினர் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசும் தடை விதித்துளளது. இதற்கு மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அரசின் நடவடிக்கை சமய சடங்குகளில் தலையிடுவதாகும் என்றும் தங்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
தருமபுர ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 2019 டிசம்பர் 4 ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றார். அன்றே ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து பட்டினப் பிரவேசம் நடந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு திருவாவாடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்வு திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி நடைபெற்றது.
அதேபோன்று இந்தாண்டு பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டினப் பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது என மன்னார்குடி ஜீயர் சென்னடலங்கார செண்பக மன்னார் இராமனுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு இதற்கு தடை விதித்திருப்பது இந்து மதத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார். அரசு இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால், ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்றும் செண்பக மன்னார் இராமனுஜ ஜீயர் எச்சரித்துள்ளார்.







