ஷூட்டிங்கில் இருந்து வெளியேறினார் சூர்யா?

எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. நந்தா, பிதாமகனை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து பாலாவும் சூர்யாவும் கைகோர்கிறார்கள். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாததால் சூர்யா 41 என்று அழைக்கப்படுகிறது. இத்துடன்…

எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. நந்தா, பிதாமகனை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து பாலாவும் சூர்யாவும் கைகோர்கிறார்கள். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாததால் சூர்யா 41 என்று அழைக்கப்படுகிறது. இத்துடன் வெற்றிமாறன் இயக்கதில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படமும் பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா கோபமாக வெளியேறிவிட்டதாகவும் இன்று காலை முதலே தகவல் வரத்தொடங்கியது.

பொதுவாகவே இயக்குநர் பாலா படங்கள் என்றாலே நடிகர்களை படாதபாடு படுத்தி ஒரு வழிக்கு கொண்டுவந்து விடுவார் என்பதே பரவலான கருத்து. யதார்த்தமான கதைகளை தேர்வு செய்யும் பாலா, அதில் வரும் நடிகர்களை ராவாக காண்பிக்கும் முயற்சியில் நடிகர்களிடம் பெரும் மெனக்கெடல்களை கோருவார். படத்தின் துணைக் கதாப்பாத்திரங்கள் கூட விசித்திரமான கெட்டப்புகள், சிகை அலங்காரங்கள் என பாலாவின் கைங்கர்யத்தால் முற்றிலும் புதிய அவதாரங்களை எடுப்பார்கள். எனவே பாலாவின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து, முடியும் வரைக்கும் வேற படங்களுகளில் அவர்கள் பணியாற்ற முடியாத சூழல் உருவாகிவிடும். துணை நடிகர்களுக்கே அப்படி என்றால் படத்தின் ஹீரோ ஹீரோயின்களின் நிலையை யோசித்து பாருங்கள்!

நான் கடவுள் படத்தில் பாலா – அஜித்துக்கு இடையே நடந்த சாகசங்கள் தொடர்பாக உலாவும் கதைகளை கோலிவுட்டே அறியும். அஜித்தை பாலா அடித்துவிட்டார் என்றுகூட வதந்திகள் பரவின. பாலா இதை மறுத்திருந்தாலும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்புகள் உண்மைதான் எனவும் ஒப்புக்கொண்டார். பொதுவாக படத்திற்கான ஒன் லைனோ அல்லது கதை சுருக்குமோ தோன்றிவிட்டால் உடனே அதை நடிகர்களிடம், தயாரிப்பாளர்களிடம் கூறி படத்திற்கான வேலையை தொடங்கிவிடுவார் பாலா என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. நான் கடவுளுக்கான திரைக்கதை முழுவதும் தயாராவதற்கு முன்பே அஜித்திடம் அட்வான்ஸ் கொடுத்து, அவரும் நீளமான முடி வளர்த்து படத்திற்கு தயாராகி விட்டார் எனவும், தொடர்ந்து பாலா தரப்பில் தாமதமானதால் அஜித்தால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது என்றும் தகவல்கள் உண்டு. இதனால் தொடங்கிய பிரச்னைகள் தான் அடுத்தடுத்து நடந்த சாகசங்களுக்கு வித்திட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் உண்டு!

இதுமட்டுமல்லாமல், சில நேரங்களில் படப்பிடிப்பின் முன் திட்டமிடாமல் ஷூட்டிங் ஸ்ப்பாட்டில் வந்துதான் அன்றைக்கான காட்சிகள் தொடர்பாக யோசிப்பார் எனவும், மைண்ட் அப்செட் என்றால் உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு கிளம்பிவிடுவார் என்ற குற்றச்சாட்டுகளும் பாலா மேல் உள்ளது. சேது முதல் நாச்சியார் வரை பாலா இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக எந்த படமும் மெகா ஹிட் அடைந்ததில்லை என்றும் சினிமா வல்லுநர்கள் கூறுகின்றனர். முறையாக திட்டமிடாததால் படப்பிடிப்பின் நேரமும் செலவும் பல மடங்கு அதிகரிப்பதால், படம் ஹிட் ஆனால் கூட அந்த வசூலானது படத்தின் பட்ஜெட்டை சரிக்கட்டுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர்.

இப்போது சூர்யா கதைக்கு வருவோம். பல தோல்விகளுக்கு பிறகு சூரரைப்போற்று, ஜெய்பீம் என மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார் சூர்யா. அவரின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாக சிறிய பின்னடைவு கொடுத்த நிலையில் மீண்டும் தன் வெற்றி முத்திரையை குத்த வேண்டிய சூழலில் உள்ளார். பாலாவின் சூர்யா 41 படத்துடன் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து சூரரைப்போற்று மூலம் தனக்கு வெற்றி மகுடம் சூட்டிய சுதா கொங்கராவின் அடுத்த படத்திலும் சூர்யா நடிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்த கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் தான் அப்படத்தை இயக்குகிறது. கே.ஜி.எஃப் போன்ற பிரம்மாண்டமான ஒரு Pan இந்தியா திரைப்படமாக அதை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, பாலா வெற்றிமாறன் படங்களின் ஷீட்டிங்கை திட்டமிட்டபடி வேகமாக முடிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் சூர்யா.

இந்நிலையில், பாலாவின் ‘சூர்யா 41’ படப்பிடிப்பு பாலாவால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதன் விளைவாக இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு மோதலாக மாறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நேரடியாக எந்த விளக்கமும் தரப்படவில்லை என்றாலும் 2D Entertainment-இன் இணைத்தயாரிப்பாளர் ஆன ராஜசேகர் ஒரு ட்வீட் போட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்துள்ளார். அதில், ‘சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது எனவும், கூடிய விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/2D_ENTPVTLTD/status/1521738207968526336

இருப்பினும் ‘இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று போட்டிருந்தாலும் நம்பியிருப்போம், ஆனால் கோவாவில் பாலா படம் எடுப்பார் என்று போட்டீர்களே அதைத்தான் நம்ப முடியவில்லை. அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மாவையே பாலா ஸ்டைலில் எடுக்கபோயிதான் படமே பாதியில நின்னுச்சி. கோவாவில் படம் எடுக்குறது பாலாவோட ஸ்டைல் இல்ல!.Something is wrong! சண்டையே நடக்கலண்ணு சொல்ல வர்றீங்க சரி, ஆனா கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்’ என இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ, பாலா கோவா போவாரா அல்லது படத்தைவிட்டு கோவமாக வெளியே போவாரா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.