ஐ.பி.ஓ (IPO) எனப்படும் , நிறுவனங்களின் ஆரம்ப கட்ட பங்கு வெளியீட்டில் முதலீடு செய்த பணத்தை கணிசமாக இழந்துள்ளனர் சிறு முதலீட்டாளர்கள். இது குறித்த செய்தியை பார்க்கலாம் ..
சமீப ஆண்டுகளில், வங்கிகளில் சேமிக்கும் பணத்திற்கு வட்டி குறைவு என்பதால் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய நடுத்தர வர்க்க மக்கள் ஆரம்பித்துள்ளனர். 
சில நிறுவனங்கள் வெற்று வார்த்தை ஜாலங்கள், மிகைப்படுத்தபட்ட விளம்பரங்களை கொண்டு ஐபிஓ என அழைக்கப்படும் ஆரம்ப கட்ட பங்கு வெளியீட்டில் அதிக அளவு விலையை நிர்ணயித்து நிதி திரட்டின. ஆனால் ஓராண்டில் பங்குகளின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், முதலீடு செய்த மக்களின் பணம் மூன்றில் இரண்டு பங்கு வரை காணாமல் போய்விட்டது. 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்த நிலையை, தற்போது சற்றேறக்குறைய மீண்டும் அடைந்துள்ளன. ஆனாலும் குறிப்பிட்ட சில நிறுவன பங்குகள் ஓராண்டில் 70 சதவீதம் அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளன. 
நிதிசார் சேவைகளை வழங்கும் பேடிஎம் (PayTM) நிறுவனம், ஆஹா, ஓஹோ என சொல்லி பங்கினை வெளியிட்டது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பங்கு ஒன்றின் விலை 2 ஆயிரத்து 150 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் பங்கு 69 சதவீதம் குறைந்து, 657 ரூபாயாக உள்ளது.
கார் டிரேட் என்ற நிறுவனத்தின் பங்கு விலை, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆயிரத்து 618 ரூபாயாக இருந்தது. தற்போது அது 573 ரூபாயாக சரிந்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை விற்பனை செய்யும் பாலிசி பஜார் (PolicyBazaar) பங்கு 980 ரூபாயிலிருந்து, 61 சதவீதம் சரிந்து 385 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
உலக அளவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் எனச் சொல்லப்படும், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யும் இந்த சுழலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
நடப்பாண்டின் , மே மாதம் 949 ரூபாயாக இருந்த LIC பங்கு, 37 சதவீதம் சரிவடைந்து 596 ரூபாயாக உள்ளது.
டெலிவரி நிறுவனத்தின் பங்கு, மே மாதம் 487 ரூபாயாக இருந்து, 21 சதவீதம் குறைந்து, 383 ரூபாயாக உள்ளது. நிறுவனங்களீன் பங்கு மதிப்பை நிர்ணயம் செய்யும் போது, செபி போன்ற அரசு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொது மக்கள் ஐபிஓ வை தவிர்த்து, பங்கு சந்தை நிபுணர்களின் ஆலோசனையுடன் பட்டியலிடப்பட்ட பின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
மேலும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்தால், வங்கியை விட கூடுதல் தொகையும், பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்….
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்







