சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று தங்களின் வாழ்க்கைப் பயணத்தை மகேந்திரன்- தீபா ஜோடி தொடங்கியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், வேலூரை சேர்ந்த 36 வயதான தீபாவும் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மருத்துவர்கள் குழு அவர்களுக்கு அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து சிறிது சிறிதாக குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். எம்.பில் வரை படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தின் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
ஆரம்பத்தில் தந்தையை இழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தபோது முதல் பார்வையிலேயே மகேந்திரன் தீபாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது. முதல் சந்திப்பிலேயே மகேந்திரன் ‘திருமணம் செய்து கொள்ளலாமா’ எனக் கேட்க, சற்றே தயங்கிய தீபா சிறிது காலத்திற்குப் பிறகு தன் காதலை ஏற்றுக் கொண்டதாக புன்னகையுடன் தெரிவித்தார் மகேந்திரன். தந்தையின் பிரிவை தாங்க முடியாத சூழலில் மனநோய்க்கு ஆளான தனக்கு மகேந்திரனே மருந்தாக கிடைத்ததாக நெகழ்ச்சியுடன் தெரிவித்தார் தீபா.
ஆரம்பத்தில் இருவரது காதலுக்கும் மனநல காப்பகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இருவரும் முழுமையாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த பிறகு காதலை ஏற்று இன்று திருமணம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்திற்கு இருவீட்டார் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த பிறகு புதுமண தம்பதி மகேந்திரன், தீபா பேசுகையில், நாங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. எங்கள் வீட்டில் திருமணம் நடத்தி வைத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருந்து இருக்குமா என்று தெரியாது . எங்கள் மருத்துவமனை தலைமை மருத்துவர் பூர்ண சந்திரிக்கா அவர்களுக்கு எங்கள் நன்றிகள் என்று தெரிவித்தனர்.








