சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.







