மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத் பவார் நலமாக உள்ளார் என மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத் பவாரின் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

“சரத் பவாருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் அவரது பித்தப்பையிலிருந்து கற்கள் என்டோஸ்கோபி மூலமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக உள்ளார்” என ரஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் அமித் மைத்தியோ “சரத் பவாரின் உடலில் சில பரிசோதனைகளை செய்தபோது நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது அவரது உடல் நிலை நலமாக உள்ளது. தற்போது கண்காணிப்பு பிரிவில் உள்ளார்.” என கூறியுள்ளார்.
முன்னதாக அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் சரத் பவார் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது. 80 வயதான பவார் புற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







