ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சக்தி காந்த தாஸ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1980 ஆம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வாகி தமிழ்நாடு கேடர் அதிகாரியாக பணியாற்றியவர்.
மத்திய அரசுப் பணிகளுக்கு செல்லும் முன், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எனப் பதவி வகித்தவர். மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலாளராகவும் பணியாற்றிய இவர், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் மூன்று ஆண்டுகள் அவர் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. 10.12.2021-ல் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, அவரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்க, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.







