தன்னை இனவெறி கொண்டவர் என்று விமர்சித்தது வேதனை அளித்தது என்றும் தான் இனவெறி கொண்டவன் இல்லை என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில், ’கருப்பினத்தவர்கள் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக சில நொடிகள் மண்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், போட்டித் தொடங்கும் முன்பும் வீரர்கள், அதை செய்து வருகிறார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியின்போது, தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக், திடீரென விலகினார். அவர் மண்டியிட மறுத்து விலகியதாகத் தகவல்கள் வெளியானது. இது சர்ச்சையானதை அடுத்து அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், குயின்டான் டி காக் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இனவெறிக்கு எதிராக நிற்பதன் முக்கியத்துவத்தையும் வீரர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற பொறுப்பையும் நான் புரிந்துகொள்கிறேன். நான் மண்டியிட்டு உறுதிமொழி எடுப்பதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மற்றவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்றால் அதை மகிழ்வோடு செய்கிறேன். யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நான் களமிறங்காமல் இல்லை. நானும் கலப்பு இன குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பது பலருக்கு தெரியாது.
சிறுவயதில் இருந்தே இந்த பிரச்னைகள் எனக்கு தெரியும். எந்த தனி நபரையும் விடமக்களின் உரிமையும், சமத்துவமும் முக்கியமானது என்பதை அறிவேன். இப்படி செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததை என் உரிமையை பறிப்பதாக உணர்ந் தேன். மற்றபடி எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. என்னை பற்றிய விமர்சனங்கள் என்னை காயப்படுத்தவில்லை. ஆனால், என்னை இனவெறி கொண்டவர் என்றதுதான் வேதனை அளித்தது. நான் இனவெறி கொண்டவன் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
……..









