சென்னையில், திருநங்கையாக பணியாற்றி வரும் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் திருநங்கை, தனியாக வசித்து வருகிறார். இரவு வீட்டில் சிலிண்டர் காலியாகி விடவே உணவு வாங்குவதற்காக அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே உள்ள ஹொட்டலுக்கு சென்றுள்ளார். உணவு ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த போது மதுபோதையில் வந்த மூன்று பேர் திருநங்கை காவலரிடம் கழிவறை எங்கே அமைந்துள்ளது எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
திருநங்கை காவலரோ தனக்குத் தெரியாது எனக் கூறிய நிலையில், அவரைப் போலவே மிமிக்ரி செய்து ஒருவர் கிண்டல் செய்துள்ளார். மேலும் திருநங்கை காவலரை சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர், தான் அமைந்தகரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதாகவும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் எனக் கூறிச் சென்றதாகவும் தெரிகிறது. இதுகுறித்து திருநங்கை காவலர் அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் காவலருக்கே சக காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








