சென்னை பாடியில் தொடரும் வழிப்பறி

சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி மேம்பாலம் அருகே கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிஎச்டி மாணவர்…

சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி மேம்பாலம் அருகே கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிஎச்டி மாணவர் ருத்ராவை வழிமறித்து விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். அதேபோல் மற்றொரு தனியார் கல்லூரி மாணவர் பரத்திபனிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க செயின் மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை காட்டிய 6 பேர் கும்பலுக்கு திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 காவல் நிலைய சந்திப்பான பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தால் இரவு பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் ரக ராயல் என்ஃபீல்டு வாகனம் திருட்டு மற்றும் வழிப்பறி, செல்போன் பறிப்பு, தங்கச் செயின் பறிப்பு என குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் அம்பத்தூர், அண்ணாநகர் காவல் மாவட்ட எல்லைகளில் உள்ள கொரட்டூர், திருமங்கலம், வில்லிவாக்கம் ஆகிய 3 காவல் நிலையத்தை இணைக்கக் கூடிய இந்த பாடி மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ளவில்லை எனவும் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.