தொடர் ஏடிஎம் கொள்ளை; கைவரிசை காட்டிய அரசு ஊழியர் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பெண்களுக்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல நடித்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆவடி…

ஏடிஎம் இயந்திரத்தில் பெண்களுக்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல நடித்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆவடி டேங்க் பேக்டரியில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே ஏடிஎம் மிஷின்களில் வரக்கூடிய பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அவர்களை மட்டும் குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு பணத்தை எடுத்துக் கொடுத்தும் பின்பு அந்த ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து அந்த பின் நம்பரை வைத்து அவர்கள் கணக்கில் உள்ள மொத்த தொகையும் எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி எம்கேபி நகரை சேர்ந்த ஜாக்லின் என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி ஆய்வு செய்வதில் பிரபு என்பவர் பல பெண்களிடம் இதுபோன்ற நூதன முறையில் மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் பிரபு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் அந்த வாகன பதிவு எண்ணை வைத்து அடையாளம் கண்டு அவரை கைது செய்தனர்.

அவரிடம், விசாரணை மேற்கொண்டதில் இவர் பல மாதங்களாக இது போன்ற நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் பிரபுவிடம் இருந்து 271 டெபிட் கார்டுகள் மற்றும் அவருடைய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தவுடன் பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.