பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே ஆக்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை 7 மணி அளவில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக உடனடியாக பல்லடம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். ஏடிஎம் இயந்திரத்தில் பதிவான கைரேகையை தடவியல் நிபுணர்கள் செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடப்படவில்லை எனவும் ஆக்சிஸ் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சியில் முதியவர் ஒருவர் லுங்கியுடன் இரவு ஒரு மணி அளவில் கையில் செங்கல்லோடு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தற்போது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற முதியவரை பல்லடம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடும் முயன்ற சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







