இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானை அந்நாட்டு ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாண சட்டப்பேரவையும், உள்ளூராட்சி மன்றங்களும் காலாவதியாகி, தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து, சிறப்பாக செயலாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்தான் திருக்கோணமலை இயற்கை துறைமுகம் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, திருக்கோணமலை இயற்கை துறைமுகம் முக்கிய பங்கு வகித்தது. மேலும் பூகோள ரீதியாக அதிக வளம் நிறைந்த ஒரு மாகாணமாக இலங்கையின் கிழக்கு மாகாணம் திகழ்கிறது.
இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் திருக்கோணமலை இயற்கை துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், இங்கு இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்குமென தொழில் வல்லுனர்கள் கருதுகின்றனர்.







