சென்னை கோயம்பேடு பழ சந்தையில் ரசாயன மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைப்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பழ சந்தையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்தவண்ணமிருந்தன.
இதனையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோயம்பேடு பழ சந்தையில் திடீர் சொதனை மேற்கொண்டனர். சோதனையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஏறத்தாழ 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பேட்டியளித்த சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் குமார், “15 டன் ரசாயன மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 45 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல ஒவ்வொரு கடைக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பழங்களை ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சூழலை தவிர்க்கவே சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
மேலும், வியாபாரிகள் தங்கள் நுகர்வோர்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.









