மழை காரணமாக சகதிகளால் நிறைந்த சாலையை இரண்டு குழந்தைகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து நீதிபதி சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா சுல்லியா தாலுகாவில் உள்ளது, பெல்லாரே கிராமம். கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, சாலைகள் சகதிகளாயின. பெல்லாரே – மண்டேவு சாலை, வாகனங்களோ, மக்களோ செல்ல முடியாத அளவுக்கு சகதியால் நிரம்பி இருந்தது. இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதால், அந்தப் பகுதி மாணவர்கள் இந்தச் சாலையின் வழியே செல்ல சிரமத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், அந்த சாலையை இரண்டு குழந்தைகள் மண்வெட்டியால் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்த வல்லிஷா ராமா மற்றும் தான்வி என்ற 2 ஆம் வகுப்பு மாணவிகள்தான் அந்த சாலையை சுத்தம் செய்தவர்கள். பள்ளிக்கூடம் செல்வதற்கு வழியில்லாததால், அந்த சாலையை அவர்கள் சரி செய்ததாக தெரிவித்தனர். அதோடு அது தனியார் சாலை என்றும் அதை தங்களால் சரி செய்ய முடியாது என்று பஞ்சாயத்து தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தச் சிறுமிகளின் செயற்பாட்டை நெட்டிசன்ஸ் பாராட்டித் தள்ளினர். அதோடு அரசையும் கடுமையாக விமர்சித்தனர். அந்தப் பகுதியில் பெரும்பாலான கிராமங்களின் சாலைகள் இதே நிலைமையில்தான் இருக்கின்றன என்றும் அதிகாரிகள் இதைக் கண்டுகொள்வதில்லை என்றும் அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சுல்லியா நீதிபதி சோமசேகரா, போலீஸ் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். சாலையை சரி செய்ய உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதோடு, சாலையை சீர் செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.








