உத்தரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தவறான செய்திகளைப் பரப்புவோரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பலமாக ஏற்பட்டுள்ளதாகச் சர்ச்சைகள் வெளியாகியுள்ள நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. சமூகத்தைச் சீரழிப்பதற்காகவே இப்படி தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். இவர்களைக் கண்டுபிடித்து உடனடியாக தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களும் தடுப்பூசிகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் இதுவரை 42 பேரை 239 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 688 ரெம்டேசிவிர் தடுப்பூசிகளையும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருந்ததாகக் கைது செய்துள்ளனர்.







