சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 60 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகரில், காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து, அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆர்ச் பகுதியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 200 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை, 3 ஆயிரத்து 609 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், 258 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 போலீசார் உயிரிழந்துள்ளதாகவும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.







