தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னையில், திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால், நாளிதழ் விநியோகத்திற்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் கட்டுப்பாடுகளுடன் குறைவான அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. உணவங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தளர்வில்லா ஊரடங்கு காரணமாக, மதுரை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி, சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க மாநகர பகுதியில் 25 இடங்களில் போலீசார் தடுப்புக்களை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். மாநகரம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளன. தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களை பிடித்து, போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அங்கு, தளர்வில்லா ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காய்கறிகள் வாங்குவதற்காக, உழவர் சந்தைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. போலீசார், ரோந்து வாகனங்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக, திருவாரூரில், போக்குவரத்து இன்றி பிரதான சாலைகள் அனைத்தும், வெறிச்சோடி காணப்படுகின்றன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு, 928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெரும்பாலான கடைகள் அடைக்கபட்டிருந்த போதிலும், பொதுமக்கள், மக்கள் சாலைகளில் முகக்கவசம் இன்றியும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றித் திரிந்தனர். குறைந்த அளவு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதால், ஆங்காங்கே கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாகவும், இதனால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.