என்.சி.இ.ஆர்.டி விவகாரம் : சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை……!

என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய ”நீதித்துறையில் ஊழல்கள்” என்ற பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப்புத்தகங்களை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில், எட்டாம் வகுப்பிற்கான புதிய பாடப்புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படிருந்த ’நீதித்துறையில் ஊழல்’என்கிற பாடப்பகுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பாடப்பிரிவில் நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் வழக்குகளின் பெரும் தேக்கம் ஆகியவை சவால்களாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தாமாக முன்வந்து இவ்வழக்கை கையிலெடுத்தார்.

இதற்கிடையே  என்.சி.இ.ஆர்.டி. இந்த சம்வத்திற்கு மன்னிப்பு கேட்டு கொண்டது. அதில் 8-ம் வகுப்பு பாட புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அந்த பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் என தெரிவித்தது.

இருந்த போதிலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு சர்ச்சைக்குரிய அந்த பாடத்துக்கு தடை விதித்தனர். அந்த பாடத்தை தயாரித்தவர்களின் பெயர்கள் மற்றும் தகுதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு அல்லது மற்ற சட்டங்களின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி மத்திய கல்வி விவகார செயலாளர் மற்றும் என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.