பன்னீர் இடத்தை பிடிக்க துடிக்கும் தலைவர்கள் : குழப்பத்தில் எடப்பாடி

அதிமுகவின் பொதுச் செயலாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு காய்களை நகர்த்தி, வெற்றியை நோக்கி செல்லும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. ஒற்றைத்தலைமை நோக்கி…

அதிமுகவின் பொதுச் செயலாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு காய்களை நகர்த்தி, வெற்றியை நோக்கி செல்லும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. ஒற்றைத்தலைமை நோக்கி நகர நாங்கள் உதவினோம், எங்களுக்கும் உரிய அங்கீகாரம் வேண்டும். எனவே பவர்புல் போஸ்டிங் தாருங்கள் என அவரது ஆதரவாளர்களான இரண்டாம் கட்ட தலைவர்கள் இப்போதே கொடி பிடிக்க தொடங்கி விட்டதாக தெரிகிறது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தது.இதனையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொது வெளியில் பேசியிருக்க வேண்டாம் என்றார். மேலும் பொதுக்குழு நடைபெறும் முந்தைய இரவு அவசர வழக்காக உயர்நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க கூடாது என உயர்நீமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மிகவும் காட்டமாக கூட்ட அரங்கில் கூறினார். அன்றைய தினம் பதவியேற்ற அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வேறு ஒரு தேதியில் பொதுக்குழுவை கூட்டம் வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக சி.வி. சண்முகம் கோரிக்கை ஒன்றினை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழ் மகன் உசேன் அடுத்த மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பன்னீர் செல்வம் தரப்பை சார்ந்த முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம், தற்போது கூடிய கூட்டம் சட்டவிரோதமாக கூடிய வேண்டும். இதனை தாங்கள் புறக்கணிக்கிறோம் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர்.

இதுஒருபுறமிருக்க தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கழக அமைப்பு செயலாளர் என்ற முறையில் இபிஎஸ் தலைமையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் 75 பேரில் 65 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார், ஓபிஎஸ் ஒரு துரோகி எனவும், துரோகத்தின் மொத்த வடிவம் எனக்கூறினார். இப்படி எடப்பாடி பழனிசாமிக்காக கடுமையாக பேசிய இரண்டாம் கட்ட தலைவர்கள் தற்போது புதிய பொறுப்பு கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தாம் தொடர்ந்து அதிமுகவிற்காக ஊடகங்களில் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறேன். இதனால் ஆளும்தரப்பு தம் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதற்காக தம் மீது வழக்குகள் எல்லாம் பதிவாகி வருகின்றன. ஒருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமிக்காக ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுவெளியில் போட்டு உடைத்து இன்று அந்த விவகாரம் அனைத்து தரப்பினரும் பேசும் பொருளாக மாற்றியது தாம்தான் என்றும், இதனால் அதிக பலனடையபோவது நீங்கள்தான், உங்களுக்கு உண்மையான விசுவாசியாக இருக்கும் தனக்கு கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என அவர் கேட்பதாக கூறப்படுகிறது.

இவர் இப்படியென்றால், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், சசிகலா விவகாரமாக இருக்கட்டும். அல்லது கூட்டணியில் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் பாரதிய ஜனதா விவகாரமாக இருக்கட்டும். இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கட்சி நிர்வாகிகளிடையே உருவாக்கி வரும் தனக்கு பொருளாளர் பதவி வேண்டும் என இபிஎஸிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிகிறது.

இந்த பொருளாளர் பதவி மீது நீண்டநாட்களாக கண் வைத்துள்ள முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியோ, உங்களின் முதல் எதிரியான சசிகலாவிற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறேன். ஓபிஎஸ் அணியில் இருந்து உங்களை நோக்கி வந்து இன்று உங்கள் கரத்தை வலுப்படுத்தியவர்களுள் நான் முக்கியமானவன். ஏற்கனவே ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே சசிகலாவால் பாதிக்கப்பட்ட நான், இன்று எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிர்வாகிகள் கூட்டத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஆணித்தரமாக ஆதரித்து வருகிறேன். அதுமட்டுமில்லாமல், சிவி சண்முகத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் ராஜ்யசபா பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பொருளாளர் பதவியை தனக்கே தர வேண்டும் என எடப்பாடியிடம் முனுசாமி கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க மதுரை ராஜன் செல்லப்பா போன்றோர் ஓபிஎஸ் கட்சியின் இருந்து முழுமையாக நீக்கினால் அவர் வகித்து வந்த பதவிகளை முக்குலத்தோர் சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதுவே சமூக நீதியாக இருக்கும் என எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

முதலில் சட்ட சிக்கல் முடியட்டும். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி யோசிக்கலாம் என எடப்பாடி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸை கழட்டிவிட்டாலும் எடப்பாடியால் முழு ஆளுமை செலுத்த முடியுமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.