இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையைத் தந்தது எனக் கூறிய அவர், குறைந்த வயதில் அவர் இறந்து விட்டார். நுரையீரல் கோளாறு காரணம் எனக் கூறப்படுவதாகத் தெரிவித்தார். அப்போது, ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், அஜினோமோட்டோ உள்ள உணவுகள், விஷமுள்ள காய்கறிகளைத் தான் நாம் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், வெளிநாட்டு மக்கள் நல்ல உணவுக்காக இங்கு வருகின்றார்கள் எனக் கூறினார்.
இப்போது எல்லாம் பாஸ்ட் புட்டை தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் எனக் கூறிய அவர், பச்சைக் காய்கறிகள் எல்லாம் செயற்கை உரங்களால் விதைக்கப்பட்டு வருகிறது. அதை விடுத்து இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எதிர்பாராத விதமாக உள்ளது அவரது இழப்பு. முதலமைச்சர் அறிவுறுத்தல் படி தொடர்ந்து சிறப்புச் சிகிச்சை அளிக்கத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். மதியம் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.








