தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 30 ஆம் தேதி கடைசிநாளாகும். மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகளும் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தொகுதிகளை முடிவு செய்வதற்காக அன்புமணி, டி.டி.வி. தினகரன் இருவரும் நேற்று டெல்லி சென்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்தார். என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள டி.டி.வி. தினகரன் தொகுதி பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.







