கடலில் காற்றாலை அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஸ்காட்லாந்து செல்ல இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவ லிங்க ராஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மின்சார துறையை மேம்படுத்த எடுக்கப் படவேண்டிய நடவடிக்கைகள், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்த அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையுடன் சீரான மின் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும், கோடைக் கால மற்றும் வரக் கூடிய மழைக் காலங்களில் விநியோகிக்கப் படக் கூடிய மின் விநியோகம் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்குப் புதிதாக மின் இணைப்பு வழங்கப் படுவது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், இந்த ஒரு ஆண்டுக் காலத்தில் மட்டும் பழுதடைந்த 13 லட்சத்து 32 ஆயிரத்து 790 இடங்களுக்கும் மேல் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், 21000-கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் இந்த சிறப்புப் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின் நுகர்வு அதிரகிக்கபட்டுள்ளது எனத்தொரிவித்த அவர், குறிப்பாக 1000-கும் மேற்பட்ட இடங்களில் மின் இணைப்பு பெட்டிகள் உயர்த்தி பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’
சென்னை மாநகராட்சி பகுதியில் மெட்ரோ மற்றும் மாநகராட்சி பணிகள் இரவில் தான் நடக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், நிலுவையிலிருந்த மின் இணைப்பு திட்டங்களை விரைவில் முடிக்க முதலமைச்சர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வரும் வருடம் 6200 மெகா வாட் உற்பத்தி தொடங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப் பட உள்ளது எனவும், மின்னகம் திட்டத்தில் இந்த ஆண்டில் வந்த புகார்களில் 94.5 சதவிகிதத்திற்கும் மேல் தீர்வு காணப்பட்டு உள்ளது எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருந்தால் கூட மின் விநியோகம் சீராக இருக்கிறது எனத் தெரிவித்த அவர், கடலில் காற்றாலை அமைப்பது தொடர்பாக நான் உட்பட உயர் அதிகாரிகள் ஸ்காட்லாந்து செல்ல உள்ளோம், அதற்காகத் தயாராகி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த பகுதியாக 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற பகுதியில் அதிக கோவில் நிலங்கள் இருப்பதால் நிலுவை இல்லாத சான்று வாங்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும், இதனால் சில விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கக் கால தாமதம் ஆகிறது எனத் தெரிவித்தார். மேலும், 12 வருடமாகக் காத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு, இந்த ஆட்சியில் 1 லட்சம் பேருக்கு இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








