முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளி ஆசிரியர் To திமுக துணைப்பொதுச்செயலாளர் வரை பயணம்

பள்ளி ஆசிரியராக வாழ்வை தொடங்கி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய – மாநில அமைச்சராக, தடா சிறைவாசம், திமுகவின் துணைப்பொதுச் செயலாளராக 7 ஆண்டுகள் என அரசியல் வாழ்வில் சவால்களை எதிர்கொண்டு உச்சங்களை தொட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டவர். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அதிமுகவிலிருந்து விலகிய அவர் 1980 இல் திமுகவில் இணைந்தார். 1984 இல் திமுக சார்பாக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.மீண்டும் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் 1989 இல் போட்டியிட்டு வெற்றிபெற்று கருணாநிதியின் அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

1991 ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுப்புலட்சுமி, 1993 இல் நாடாளுமன்ற்ந் தேர்தலில் பழனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1992 இல் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார். 1996 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுப்புலட்சுமி, 2001 இல் அதே மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

 

2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற சுப்புலட்சுமி, மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடாத நிலையில், 2021 ஆம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் சபாநாயகர் அல்லது அமைச்சராக வருவார் என பேசப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியடைந்தார்.

2015 முதல் திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்து வந்த சுப்புலட்சுமி, வயது முதிர்வின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளை தவிர்த்து வந்தார். இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. அந்த விழாவிற்கு முன்னதாகவே ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதியே பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக விலகல் கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கொடுத்துள்ளார்.

 

-சிரில் தேவா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

Gayathri Venkatesan

அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு

EZHILARASAN D

வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடி

Janani