பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடத்திற்கும், நெற்கட்டும்செவல் கிராமத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் ஆகியோரின் நினைவிடத்திற்கும் சென்ற தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், நினைவிடங்களை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக செய்தி துறை சார்பில் இந்த கோட்டை மற்றும் நினைவிடங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவு தூண்கள், மற்றும் அரங்கங்கள் அமைக்கவும் அவர்களுக்கு தகுந்த மரியாதை செலுத்தவும் முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்” கூறினார்.
பூலித்தேவன் தபால் தலை வெளியீடு பற்றிய கேள்விக்கும், “இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாமன்னர் பூலித்தேவனின் படைத்தளபதியான வெண்ணிக்காலாடி அவருக்கும் வருகிற காலங்களில் விழா நடத்த அரசாணை நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் கள்ளக்குறிச்சியில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கள்ளக்குறிச்சியில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதற்கு உரிய நேரத்தில் சட்டம் தன் கடமையை செய்து நீதியின் முன் நிறுத்தி தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.







