முக்கியச் செய்திகள் இந்தியா

ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!

“பட்டியலின மாணவர்கள் கல்வி கற்றால், எங்கள் வயல்களில் யார் வேலை செய்வது?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியது யார் தெரியுமா?
மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியரே, என்றால் நம்ப முடிகிறதா?

பள்ளியில், அலுவலகத்தில் என பல இடங்களில், பல வகையில் இன்றும் சாதிய ஒடுக்குமுறைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும், இதுபோன்றதொரு ஒடுக்குமுறையானது ஆன்லைன் கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

’தி ஸ்கூல்’ என்னும் பள்ளி மாணவர்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கல்வி குறித்த ஆய்வு, இந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு, தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என நாடு முழுவதும் நடத்தப்பட்டது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த 1,400 பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நகர்ப்புறங்களில் 24 சதவீத மாணவர்களும், கிராமப்புறங்களில் வெறும் 8 சதவீத மாணவர்களும் மட்டுமே தொடர்ச்சியாக ஆன்லைன் கல்வி பயில்வதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 19 சதவீத நகர்புற மாணவர்கள், 37 சதவீத கிராமப்புற மாணவர்கள், கல்வி பயில்வதையே விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டனர் என்ற அதிர்ச்சிக்குரிய செய்தியை தருகிறது இந்த ஆய்வு.

தங்கள் குழந்தை ஆன்லைன் கல்வி பயில “போதுமான இணைய வசதி” உள்ளதாக கூறும் பெற்றோர் நகர்ப்புறங்களில் வெறும் 23 சதவீதமும், கிராமப்புறங்களில் 8 சதவீதமுமாகவே உள்ளனர். ஸ்மார்ட்ஃபோனும் இணைய வசதியும் இருந்தாலுமே, தொடர்ச்சியாக ஆன்லைன் கல்வி பயில இயலாத மாணவர்கள் நகர்ப்புறங்களில் 76 சதவீதமும் கிராமப்புறங்களில் 92 சதவீதமாகவும் உள்ளனர். இதில் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதனால், வீட்டில் உள்ள குழந்தைகளால் ஆன்லைன் கல்வி பயில இயலவில்லை.

பள்ளியில் ஆசிரியர்கள் அருகிலிருந்து சொல்லிக் கொடுக்கும்போதே பல பிழைகளை மாணவர்கள் இழைக்கக் கூடும். ஆனால், தற்போது ஆசிரியர்களின் அரவணைப்பு இல்லாததால், பெரும்பான்மையான பெற்றோர் தங்கள் குழந்தையின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளில் சரளமாகப் படிக்கக் கூடிய குழந்தைகளின் சதவீதம் பாதிக்கும் மேலாகக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சியான முடிவை தி ஸ்கூல் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் குறைந்து வந்தாலும், அவர்கள் உயர் வகுப்புகளுக்கு உயர்த்தப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படாததால், மாற்றாக அரிசி அல்லது கோதுமையைப் பெறுவதாக, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

2011-ல் சராசரியாக 91 சதவீதமாக இருந்த, 10 முதல் 14 வயதினரின் கல்வியறிவு விகிதம், தற்போது 2021ல் நகர்ப்புறங்களில் 74 சதவீதமும், கிராமப்புறங்களில் 66 சதவீதமுமாக உள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் உள்ள பட்டியலின மாணவர்களின் கல்வியறிவு விகிதம் 61 சதவீதமாக மட்டுமே உள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில், தினசரி ஆன்லைன் கல்வி பயிலும் 15 சதவீத மாணவர்களில், வெறும் 4 சதவீதம் மட்டுமே பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், 43 சதவீத பட்டியலின மாணவர்கள் ஊரடங்கில் கல்வி கற்பதையே விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இது ஒரு புறம் என்றால், ஆன்லைன் கல்வியில் பட்டியலின மாணவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளையும் கண்டறிந்ததாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு, ஜார்கண்ட் மாநிலத்தின் குத்மு கிராமத்தில், நேர்காணல் செய்யப்பட்ட 1 முதல் 8-ம் வகுப்பை சேர்ந்த 20 பட்டியலின மாணவர்களில், ஒருவரால் கூட ஒரு வாக்கியத்தைச் சரளமாகப் படிக்க இயலவில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. இது குறித்து ’தி ஸ்கூல்’ ஆய்வு குழு, ஜார்கண்ட் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, “பட்டியலின மாணவர்கள் கல்வி கற்றால், எங்கள் வயல்களில் யார் வேலை செய்வது?” என்று அந்த ஆசிரியரே கூறியதாக, இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன ஆன்லைன் கல்வி காலத்திலும் இதுபோன்ற ஒடுக்குமுறைகள் ஏற்படுவதை போக்கவும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் போக்கும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் தரப்பு கோரிக்கையாக இருக்கிறது.

  • சி.பிரபாகரன்
Advertisement:
SHARE

Related posts

பகத்சிங் நாடகம்: தூக்குப் போடும் காட்சியில் நடித்தபோது சிறுவன் உயிரிழப்பு

Gayathri Venkatesan

கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

Jayapriya