இந்தியா கட்டுரைகள்

வேளாண்மையில் புதிய புரட்சி


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை ஊழியர்களுடன் காணொலி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகள் இயற்கை முறை வேளாண்மைக்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளாண்மையில் பசுமைப் புரட்சிக்கு அடுத்து, தற்போது இயற்கை வேளாண்மை புரட்சி சத்தமின்றி நிகழ்ந்து வருகிறது, என்றே கூறலாம். இயற்கை விவசாயத்திற்கு எப்போதும் தனி மதிப்பும் சந்தையும் உண்டு. உலகளவில் இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், 30 சதவீத இயற்கை விவசாயிகள், நம் நாட்டில் தான் உள்ளனர்.

முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது. திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் தற்போது இந்த இலக்கை எட்டியுள்ளன. இதனிடையே மலைப் பகுதிகள் சூழ்ந்த வடகிழக்கு மாநிலங்களில், இயற்கை வழி வேளாண்மையை ஊக்கப்படுத்த, மத்திய அரசு இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டத்தை, 2015-ல் அமல்படுத்தியது. அதுமட்டுமின்றி, 2018-ம் ஆண்டு விவசாய – ஏற்றுமதி கொள்கை தந்த சலுகைகளால், இயற்கை விவசாய சந்தையில், சர்வதேச அளவில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்தது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், இயற்கை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. அந்த வகையில், தற்போது 16-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், தற்போது கொரோனா காலத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

மூலிகைகள், தேயிலை, மஞ்சள், நெல், மானாவாரி பயிர்கள் ஆகியவை, இயற்கை முறையில் நம் நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை உரம் மூலம் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்க, பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதுவும் குறிப்பாக, தற்போது கொரோனா காலத்தில், இந்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருட்கள், சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக குவிண்டால் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மஞ்சள், இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்டால், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் டன் அளவிலான இயற்கை வேளாண் பொருட்கள், நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகின்றன. மார்ச் 2020 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 28 லட்சம் ஹெக்டேரில், இயற்கை உணவுப்பொருள் உற்பத்தி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மொத்த நிலமும் இயற்கை வேளாண்மையின் கீழ், சான்றிதழ் பெற்ற நிலப்பரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

750 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, வரும் 2050-ம் ஆண்டுக்குள் 950 கோடியாக உயரும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், சாகுபடி நிலப்பரப்பு 4 சதவீதம் மட்டுமே உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை முறை தொடர்ந்து முன்னேற்றம் கண்டாலும், இதன் மூலம் அதிகபட்சமாக 400 கோடி மக்களுக்கே உணவளிக்க முடியும் என கூறப்படுகிறது. எனவே, இயற்கை வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும், என்ற கோரிக்கையை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே, இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை ஊழியர்களுடன், காணொலி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகள் இயற்கை முறை வேளாண்மைக்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், அதை ஊக்கப்படுத்தும் வகையில், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், என்றும் பிரதமர் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது, இத்துறையில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

பயன்படுத்தப்படாத 70 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பொது இடங்களில் வெர்டிகல் கார்டனை அமைத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி!

Saravana

இந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானு

Ezhilarasan

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை

Halley karthi