திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதில் ஒரு மாணவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது.
தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களும் பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிஷப் பள்ளி மாணவர்களுக்கிடையே கடந்த இரண்டு நாட்களாக வாக்குவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் இது மாணவர்களுக்கிடையே மோதலாக மாறியது. இதில் பிஷப் பள்ளி மாணவர் ஒருவருக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
பேருந்து நிலையத்தில் சுற்றி இருந்த பொதுமக்கள் மாணவர்களின் மோதலை தடுக்க முற்பட்டபோது மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த மாணவனை மீட்டு பொதுமக்கள் திருப்பூர் தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அறிவுரை கூறி போலீசார் மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
—-அனகா காளமேகன்






