பள்ளி குழந்தைகளை ஆட்டோ மற்றும் ரிக்ஷாவில் அழைத்து செல்லப்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பள்ளி வாகனங்களில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி குழந்தைகளை ஆட்டோ மற்றும் ரிக்சாவில் அழைத்து செல்லப்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகனங்களுக்கு என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளது என்றும், ஆனால் ஆட்டோ, ரிக்சாக்களுக்கு என்ன விதிமுறை உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர். 
மேலும், வழக்கு குறித்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.







